புதுச்சேரி, டிச. 9: புதுச்சேரி எல்லை பகுதியான பாகூர் சேலிமேடு பகுதியில் அமையவிருந்த சுங்கச் சாவடியை அங்கு அமைத்தால் புதுச்சேரி மக்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு (எ) குப்புசாமி எம்எல்ஏ மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து பாகூர் சேலியமேடு பகுதியில் சுங்கச்சாவடி அமையவுள்ள இடத்தில் போராட்டம் நடத்தினர். மேலும் பாகூர் சேலியமேடு பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என நேரு (எ) குப்புசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சேலிமேட்டில் சுங்கச் சாவடி அமையக்கூடாது என்ற மனுவானது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர் ஞானசேகர் சுங்கச்சாவடி அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். இதுசம்பந்தமாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, சுங்கச்சாவடி அமைவது குறித்து மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
+
Advertisement


