மின்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு - பரபரப்பு தலைவர்கள், எம்எல்ஏக்கள் கைது
புதுச்சேரி, செப். 9: புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, திமுக, காங்., எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து செப்.8ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் ராஜா தியேட்டர் சந்திப்பு அருகே நேற்று காலை திரண்டனர். அங்கிருந்து பேரணியாக நேரு வீதி வழியாக கவர்னர் மாளிகையை நோக்கி முற்றுகையிட வந்தனர்.
இப்போராட்டத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திமுக அவை தலைவர் எஸ்.பி.சிவக்குமார், திமுக எம்எல்ஏக்கள் சம்பத், செந்தில்குமார், காங்., எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நந்தா சரவணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேவிஎஸ் ஆறுமுகம் (எ) சரவணன், சிபிஐ சார்பில் சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, நாரா.கலைநாதன், சுப்பையா, அந்தோணி, சிபிஎம் சார்பில் ராமச்சந்திரன், முருகன், பெருமாள், ராஜாங்கம், விசிக தேவ.பொழிலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, நேரு வீதி - கேண்டீன் வீதி சந்திப்பில் சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு சாலை நடுவே பேரிகார்டு போடப்பட்டு, பேரணியாக வந்த இந்தியா கூட்டணி கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, மின்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், இதற்கு உடந்தையாக இருக்கும் என்ஆர் காங்., - பாஜக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் எம்எல்ஏக்கள் பேரிகார்டு மீது ஏறி தங்களது எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தடுப்புகளை மீறி கவர்னர் மாளிகையை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா உட்பட எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகளை கைது செய்து, எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.