காட்டுமன்னார்கோவில் அருகே நூதன முறையில் சூப்பர் மார்க்கெட்டில் டிப்டாப் ஆசாமி மோசடி சிசிடிவி வீடியோ வைரல்
காட்டுமன்னார்கோவில், ஆக. 9: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மடவிளாக தெருவில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 25 வயது டிப் டாப் ஆசாமி வந்துள்ளார். அப்போது கடையில் மேனேஜர் ராஜா(50) இருந்துள்ளார். அவரிடம் டிப்டாப் ஆசாமி எங்கள் வீட்டில் நடைபெறும் விசேஷத்திற்கு 5 பாக்ஸ் சமையல் எண்ணெய் வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் நான் அருகில் உள்ள பால் கடை உரிமையாளர் மகன் எனவும், பொருட்கள் வாங்கும் லிஸ்ட் வீட்டில் உள்ளது. 5 பாக்ஸ் சமையல் எண்ணெய் மட்டும் கேட்டவர் வீட்டில் உள்ள பொருட்கள் வாங்கும் லிஸ்ட்டை எடுத்து வருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜா 5 பாக்ஸ் கொண்ட 30 லிட்டர் சமையல் எண்ணெய்யை கொடுத்துள்ளார். அதனை எடுத்துக் கொண்டு அந்த டிப் டாப் ஆசாமி புதுச்சேரி பதிவு எண் கொண்ட பைக்கில் சென்றுவிட்டார்.
ஆனால் வெகு நேரம் ஆகியும் ஆசாமி திரும்பி வராததால் ராஜா அருகில் உள்ள பால் கடைக்கு சென்று விபரத்தை கூறியுள்ளார். அப்போது பால் கடையில் அவர் யார் என தெரியாது என கூறியுள்ளனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜா இதுகுறித்து வர்த்தகர்களிடம் கூறியுள்ளார். அதன்பேரில் டிப்டாப் ஆசாமி யார் என்பது குறித்து வர்த்தகர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி வர்த்தகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏமாற்றி எடுத்து செல்லபட்ட எண்ணெய் ரூ.5 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.