கள்ளக்குறிச்சி, அக். 8: கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த மாணவி மதி உயிரிழந்த மரண வழக்கை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி(17) என்பவர் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில் இவ்வழக்கில் இருந்து ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய இருவரையும் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து ஆசிரியர்களை நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறு விசாரணை செய்திட வலியுறுத்தி மதியின் தாய் செல்வி ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், விசாரணை மேற்கொண்ட போலீசார்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட 36 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவி மதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் குறித்த வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.