புதுச்சேரி, அக். 8: புதுச்சேரி வில்லியனூர் அருகே கஞ்சா விற்பனை தனியார் கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 279 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் உறுவையாறு பாலம் அருகே இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக மங்கலம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சென்றபோது, அங்கு 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து இருவரையும் சோதனை செய்தபோது, அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரிடமிருந்து 270 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த அரிகரன் (20), வில்லியனூர் ஆச்சாரியபுரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20) என்பதும், இதில் ஒருவர் தனியார் கல்லூரி மாணவர் என்பதும், இவர்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள கஞ்சாவை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் சென்னைக்கு சென்று அங்குள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்களிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.