சின்னசேலம், ஆக. 8: சின்னசேலம் அருகே பைக் மீது மினிலாரி மோதியதில் நண்பர்கள் 3 பேர் பலியானார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாககுப்பம் மாரியம்மன் கோயிலை சேர்ந்தவர் தங்கசாமி மகன் தினேஷ்(25). திருமணமானவர். இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். அதே ஊரை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் வெங்கடேசன்(23), பழனிசாமி மகன் சிவசக்தி(26) ஆகிய இருவரும் தினேஷ்யுடன் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். 3 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர் வந்திருந்தனர். இந்நிலையில் மூன்று பேரும் ஒரே பைக்கில் சின்னசேலத்தில் இருந்து அம்மையகரம் நோக்கி சென்றனர். அப்போது, சின்னசேலம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து சேலம் நோக்கி கொய்யாப்பழம் ஏற்றி வந்த மினி லாரி அதிவேகமாக வந்து இவர்கள் மீது மோதியது. இவர்கள் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்தனர். தகவலறிந்த சின்னசேலம் எஸ்ஐ மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
+
Advertisement