கடலூர், ஆக. 8: கடலூர் அருகே காரைக்காடு சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து லாரி ஒன்று வேஸ்ட் ஆயில் ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சங்கொலிகுப்பம் அருகே லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த வேஸ்ட் ஆயில் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. அப்போது அவ்வழியாக சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த டிராக்டர், மற்றும் ஒரு கார் டேங்கர் லாரியிலிருந்து வெளியேறி சாலையில் கொட்டி இருந்த ஆயிலில் வழுக்கி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் சாலையின் ஓரம் கவிழ்ந்தது. கார் மற்றும் டிராக்டர் ஓட்டுனர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து சாலையில் கொட்டியிருந்த ஆயிலை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
+
Advertisement