விழுப்புரம், நவ. 7: விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் பழங்கால அகல் விளக்கு கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுடுமண்ணாலான அகல்விளக்கை அவர் கண்டெடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், தளவானூர் தென்பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுடுமண் அகல் விளக்கு தட்டு வடிவில் நான்கு திரிகளை கொண்டு அழகிய கலைநயத்துடன் சிவப்பு நிறத்தில் உள்ளது. பண்டைய காலத்தில் மனிதன் நெருப்பின் அவசியத்தை அறிந்திருந்தான். நாகரீகம் அடைந்த பிறகு புதிய கற்காலத்தில் ஓர் இடத்தில் தங்கி வாழ ஆரம்பித்தான். அப்போது அவனுக்கு விளக்கு அவசியமாக இருந்தது. இதையடுத்து அவன் ஈரமான களிமண்ணை எடுத்து கைவிரலால் சற்று குழியாக செய்து சிறிய விளக்குகள் போல செய்து பயன்படுத்தி கொண்டான்.
தமிழகத்தில் பையம்பள்ளி, மோதூர், அப்புகல்லு ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் கையினால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் மதுரை கீழடி, ஆதிச்சநல்லூர், அரிக்கன்மேடு, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் சுடுமண் அகல்விளக்குகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தளவானூர் தென்பெண்ணையாற்றில் கண்டறியப்பட்ட அகல் விளக்குகள் அரிக்கன்மேடு பகுதி அகழாய்வுகளில் கண்டறிந்த அகல் விளக்குகளோடு இவை ஒத்துப்போகிறது. எனவே பழங்கால மக்கள் தென்பெண்ணையாற்றங்கரை பகுதிகளிலும் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது என்றார்.
