உளுந்தூர்பேட்டை அருகே துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலை
உளுந்தூர்பேட்டை, அக். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம். குண்ணத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் கண்ணன் (50) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி ராணி உடன் வீட்டை பூட்டி விட்டு தனது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகிறார். எம்.குண்ணத்தூர் கிராமத்தில் அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரங்களில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வரும் சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.