கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை துணை முதல்வரிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி பெண் செஞ்சியில் நெகிழ்ச்சி சம்பவம்
செஞ்சி, டிச. 6:செஞ்சி அருகே உள்ள பெரும்புகை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் வசித்து வருகிறார். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செஞ்சியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார்.
அப்போது மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் தலைமையில் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளியான மகேஸ்வரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் காருக்கு எதிரே கட்சி கொடியுடன் வந்து தன்னுடைய கோரிக்கையை கேட்குமாறு கூறினார். இதனை அடுத்து அவரை அருகில் வரவழைத்து துணை முதல்வர் அவருடன் பேசினார். அப்போது இதனைத் தொடர்ந்து உங்கள் கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். அப்போது மாற்றுத்திறனாளி பெண் உதயநிதிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

