புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரி கதிர்காமத்தை சேர்ந்த பெண்ணுக்கு நண்பர் ஒருவர், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில், ஆன்லைன் முதலீட்டில் ரூ.1.08 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான லாபம் கிடைக்கவில்லை. முதலீடு பணத்தையும் அவரால் திரும்ப எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதேபோல், கதிர்காமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணும் இதேபோல் ஆன்லைன் முதலீட்டில் ரூ.1.84 லட்சத்தை இழந்துள்ளார்.
இதேபோன்று, கதிர்காமத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணிடம் முத்ரா லோன் ஆபீசர் என அறிமுகம் செய்து, ரூ.1 லட்சம் கடனை குறைந்த வட்டியில் தருவதாகக் கூறியுள்ளார். அதற்கு செயல்முறை கட்டணமாக ரூ.43,600 செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், அந்த தொகையை அனுப்பியுள்ளார். அதன்பிறகு கடன் கிடைக்கவில்லை. இதுபற்றி கேட்டதற்கு, மார்பிங் போட்டோக்களை அனுப்பி, மேலும் பணம் கேட்டு அந்த நபர் மிரட்டியுள்ளார்.
அதேபோல், முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு அறிமுகம் இல்லாத நபர் போன் செய்து, உங்கள் தங்கைக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், வங்கி, ஏடிஎம் கார் விவரங்களை கூறவே, அந்த நபர் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரத்தை எடுத்து விட்டார். இது குறித்து மேற்கண்ட பாதிக்கப்பட்ட 3 பெண்களும் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
