Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் ஒரே நாள் இரவில் 10 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது

புதுச்சேரி, ஆக. 6: புதுச்சேரியில் ஒரே நாள் இரவில் 10 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். வெள்ளத்தில் வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். புதுச்சேரியில் கத்தரி எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்தபிறகும், அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் 10 முறை 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுத்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் வரும் 8ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 8.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. சுமார் இரண்டரை மணி நேரம் விடாமல் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காமராஜ்நகர், கிருஷ்ணாநகர், ரெயின்போநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத்தோட்டம் அணைக்கரைமேடு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேட்டுப்பாளையம் மீன்மார்க்கெட் அருகே வாய்க்கால் ஓரம் சொக்கநாதன்பேட்டை வழுதாவூர் ரோட்டை சேர்ந்த திலீபன் என்பவர் தனது லோடுகேரியர் சரக்கு வாகனத்தை நிறுத்தி இருந்தார். இரவு 9.20 மணியளவில் பெய்த கனமழையால் சரக்கு வாகனம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திலீபன் வாகனத்தில் ஏறி அதை நிறுத்த முயன்றார். அவரும் சேர்த்து அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட திலீபனை மீட்டனர். அதேபோல், காமராஜ்நகரை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் அதே பகுதியில் சைக்கிளில் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மீட்பு பணியை கதிர்காமம் தொகுதி எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ் பார்வையிட்டு துரிதப்படுத்தினார். கனமழையால் நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கோரிமேடு சைபர் கிரைம் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை ஒரே நாளில் 10 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. தொடர்ந்து, நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.