Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டோல்ப்ரீ எண் மக்களுக்கு தெரிவதில்லை ரூ. 200 கோடி மின்பாக்கியை வசூலிக்காதது ஏன்? உறுதி மொழி கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சரமாரி கேள்வி

புதுச்சேரி, ஆக. 6: மின்துறையில் ரூ. 200 கோடி மின்பாக்கியை வசூலிக்காதது ஏன்? என அதிகாரிகளிடம் எம்எல்ஏக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டசபை உறுதி மொழி கூட்டம் சேர்மன் பாஸ்கர்(எ) தட்சிணாமூர்த்தி தலைமையில் நடந்தது. சபாநாயகர் செல்வம் கூட்டத்தை துவக்கி வைத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மின்துறை பொதுப்பணித்துறை ஆகிய துறைகளில் சட்டமன்றத்தில், அறிவிக்கப்பட்டு, நடைமுறைக்கு வராத திட்டங்கள், பிரச்னைகள் குறித்து விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, பிரகாஷ்குமார், சம்பத் செந்தில்குமார், நாகா. தியாகராஜன், அரசு செயலர் முத்தம்மா, பொதுப்பணித்துறை சார்பில் தலைமை பொறியாளர் வீரச்செல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர்கள் வாசு, ராதாகிருஷ்ணன், சந்திரகுமார், கஜலட்சுமி, சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மின்துறை சார்பில் கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சென்னிதாலா, கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் செயற்பொறியாளர்கள் ரமேஷ், செந்தில்குமார், ராஜ, கிருஷ்ணசுவாமி, தர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும், என்ன பிரச்னை, எப்போது மின்சாரம் வரும் என்ற தகவல் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. மின்துறையின் டோல்பிரீ எண் மக்களுக்கு சரியாக தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் டோல்பிரீ எண்ணுக்கு அழைத்தால் யாரும் எடுப்பதில்லை. எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். 60 சதவீதம் பணம் செலுத்தினாலும், நடவடிக்கை தொடர்கிறது, ஆனால் தனியாருக்கு மட்டும் மின் கட்டண பாக்கி செலுத்துவதில் சலுகை காட்டப்படுகிறது. ரூ. 221 கோடி மின் கட்டண பாக்கி இன்னமும் வசூல் செய்யவில்லை.

இதில் அரசு நிறுவனங்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது. உடனடியாக வசூலிக்க பாருங்கள். இல்லாவிட்டால் தள்ளுபடி செய்துவிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்யவும். மீதமுள்ள ரூ.100 கோடி நீதிமன்ற தீர்ப்பை காட்டி வசூலிக்கப்படவில்லை என அறிகிறோம். மின் பாக்கி வசூல் செய்வதில் எந்த தடையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. ஹைமாஸ் விளக்குகளை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, மின்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என மூன்று துறைகளில் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதற்கு யார்தான் பொறுப்பு என தெரியவில்லை. இதில் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இதனை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். வாரிசுதாரர்கள் அடிப்படையில் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதல்வர் அறிவித்தார். ஆனால் தற்போது செய்ய மறுக்கிறீர்கள் என தெரிவித்தனர். அனைத்து உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு விரைவில் பிரச்னை சரிசெய்வதாக வலியுறுத்தினர். சட்டப்பேரவை செயலர் தயாளன் நன்றி கூறினார்.