Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு 3வது முறையாக அனுமதி மறுப்பு விஜய்க்கு எதிராக பாஜ போர்க்கொடி

புதுச்சேரி, டிச. 3: . புதுச்சேரியில் நாளை மறுநாள் (5ம் தேதி) ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு கடந்த வாரம் புதுச்சேரி த.வெ.க. நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கரூரில் நடந்த 41 பேர் உயிர் பலி சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் ரோடு ஷோ நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட், ரோடு ஷோ நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் பரிந்துரைகளை வழங்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சென்னை ஐகோர்ட் கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரி மாநிலமும் இடம் பெற்றுள்ளது. இதனால் ஐகோர்ட் உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேரிக்கும் பொருந்தும். இதனால் புதுச்சேரி அரசும் ரோடு ஷோ தொடர்பான ஐகோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுவை டிஜிபி ஷாலினி சிங்கை சந்திக்க வந்தார். ஆனால் டிஜிபியும், ஐஜி அஜித்குமார் சுக்லாவும் இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து முதல்வரையும் சந்தித்தார்.

இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், ‘புதுச்சேரி தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார். இந்நிலையில் தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேற்று மதியம் முதல்வர் ரங்கசாமியை மீண்டும் அவரது இல்லத்தில் சந்தித்தனர். வெளியே வந்த இருவரிடமும் ரோடு ஷோவுக்கு அனுமதி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பதிலளிக்காமல் சென்றுவிட்டனர். இந்நிலையில் புதுவை சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், புதுவையில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் அனுமதி கேட்டு வருகின்றனர். தமிழகம்போல் புதுவையில் பிரமாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள்தான் உள்ளது. அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்துவதை அனுமதிக்கக் கூடாது. அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும்’ என்றார். விஜய் ரோடு ஷோவுக்கு பாஜவை சேர்ந்த சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அனுமதி வழங்கக்கூடாது என் கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று சட்டசபையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, ஐஜி அஜித்குமார் சிங்லா, டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன் மற்றும் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் முடிந்தபின் டிஐஜி சத்தியசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி இல்லை. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான இடத்தையும், தேதியையும் அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்’ என்றார்.

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ அரசை தவெகவினர் குற்றம்சாட்டுவார்களா?

புதுவையில் ரோடு ஷோ நடத்த இதுவரை 3 முறை முதல்வர், போலீஸ் அதிகாரிகளை தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து உள்ளனர். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பாதுகாப்பு கருதி, விஜய் பிரசாரத்துக்கு போலீஸ் நிபந்தனைகள் விதித்தபோது, அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்று தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், விஜய்க்கு நல்ல நண்பராக திகழும் புதுவை முதல்வர் ரங்கசாமி கூட, அவரது ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்து உள்ளார். எந்த அரசாக இருந்தாலும், மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதை முக்கியமாக பார்க்கும். தனிப்பட்ட நபரால் அப்பாவி மக்கள் உயிரிழக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும். தமிழக அரசுக்கு எதிராக பேசிய தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் தற்போது புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜவுக்கு எதிராக பேசுவார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் தவெக கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், அந்த அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசுவதில்லை. தமிழகத்தில் மைக்கை நீட்டினால், அரசுக்கு எதிராக பேசும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் புதுச்சேரியில் மைக்கை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்கள். விடாமல் துரத்தி கேள்வி கேட்டாலும் மவுன விரதம் இருப்பதுபோல் அமைதியாக காரில் ஏறி செல்கிறார்கள்.