சிதம்பரம், நவ. 2: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கணக்கரப்பட்டு, நர்கந்தங்குடி, குமாரமங்கலம், வசபுத்தூர், நடராஜபுரம், உத்தம சோழமங்கலம், தெற்கு பிச்சாவரம், கீழப்பெரும்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 5000 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் புயல் காரணமாக இப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள வயல்களில் மழைநீர் சூழ்ந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
மேலும் விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய விளைநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து நிற்பதால் நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30,000 செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சிதம்பரம் மேற்கு பகுதியில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால், ஓடையில் உபரிநீர் தடையின்றி செல்ல வழியில்லாமல் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஓடை நீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படாத வண்ணம், வெள்ளியங்கால் ஓடையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஓடையை முழுமையாக தூர்வார வேண்டும், என்றனர்.

