சின்னசேலம், ஆக. 2: கச்சிராயபாளையம் அருகே பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு மனைவி மாரியம்மாள் (45). விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது குடும்ப செலவிற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் தனது இரண்டு பவுன் நகையை அடகு வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரியம்மாள் கள்ளக்குறிச்சியில் உள்ள நகை அடகு கடைக்கு சென்று தனது நகையை மீட்டு பர்ஸில் வைத்து, பின் பர்சையும், செல்போனையும் ஒரு கட்டைப்பையில் வைத்துக் கொண்டு, கச்சிராயபாளையம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி நின்று கொண்டு பயணம் செய்தார். பின்னர் அக்கராய பாளையத்தில் இறங்கி தனது அக்கா மகளை பார்த்துவிட்டு மீண்டும் பஸ் ஏற வந்தார். அப்போது பையைப் பார்த்தபோது மணி பர்சை காணவில்லை. அதிலிருந்த நகையையும் செல்போனையும் யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றுவிட்டான். இதுகுறித்து மாரியம்மாள் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+