ரெட்டிச்சாவடி, ஜூலை 1: ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் விழுப்புரம் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சாலை அமைப்பதற்கான கட்டுமான பொருட்கள், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தில் கடந்த 24ம் தேதி முதல் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் தொடர்ச்சியாக காணாமல்போனது. யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் நிறுவனத்திற்குள் புகுந்து இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்த தனியார் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மதன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் புதுக்கடை ஏரிக்கரை பகுதியில் ரெட்டிச்சாவடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 3 பேர் சந்தேகப்படும்படி கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது ரெட்டிச்சாவடி அடுத்த சிங்கிரிகுடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இருசன் மகன் ஜெயப்பிரகாஷ் (24), மேட்டுப்பாளையம் புதுராஜா மகன் மணிகண்டன் (27), புதுக்கடை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பரசுராமன் மகன் ராஜேந்திரன் (59) என்பதும், இவர்கள் புதுக்கடை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் இரும்பு பொருட்களை திருடி புதுக்கடை ஏரிக்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்த 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.