இ-நாம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வியாபாரிகள் நாளை முதல் போராட்டம்
விழுப்புரம், ஜூலை 29: தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கு மூலம் பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதனிடையே விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இ-நாம் திட்டத்துக்கு தொடர்ந்து வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட அனைத்து வேளாண் விளைபொருள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பு, அரிசி ஆலை நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் இ-நாம் திட்டத்தை கைவிடக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம், ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று அதன் ஒருங்கிணைப்பாளர் குபேரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்த விளைபொருட்களுக்குண்டான தொகையை விற்பனைக்கூட வங்கி கணக்குக்கு மொத்தமாக அனுப்பி வந்தனர். அதை பிரித்து ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குக்கும் விற்பனைக்கூட நிர்வாக அலுவலர்கள் அனுப்பி வந்தனர். அதை மாற்றி வியாபாரிகளே விவசாயிகளின் வங்கி கணக்குக்கு இ-நாம் வலைத்தள பக்கத்தின் மூலம் பணத்தை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
எனவே பழைய நடைமுறையே தொடர வேண்டும். கமிட்டியில் பழைய நடைமுறையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உறவுகள் சரியாக இருந்தது. புதிய நடைமுறையில் பல நிர்வாக சிக்கல்கள் உள்ளன. அதை சரிப்படுத்த வேண்டும். பணப்பட்டுவாடா விஷயத்தில் நடைமுறையை மாற்றி புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால் வரும் 30ம் தேதி (நாளை) முதல் காலவரையற்ற முறையில் மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதில்லை என்றும், கொள்முதல் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விளைபொருட்கள் கொள்முதல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்கூட்டியே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.