உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
உளுந்தூர்பேட்டை, ஜூலை 23: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பரிக்கல் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் தரமற்ற முறையில் வழங்கப்படுவதாகவும் அரிசியில் அதிகளவில் பூச்சிகள் இருப்பதால் இதனை கண்டித்து இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரிக்கல்-கெடிலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அசோகன், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் மீது திருநாவலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.