சங்கராபுரம், ஆக. 3: சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் பின்புற பகுதியில் வசித்து வருபவர் முகமது கவுஸ் மகன் முகமது யாசர். இவர், சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் குடிக்க தண்ணீர்...
சங்கராபுரம், ஆக. 3: சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் பின்புற பகுதியில் வசித்து வருபவர் முகமது கவுஸ் மகன் முகமது யாசர். இவர், சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். பின்னர் முகமது யாசர் தண்ணீர் கொடுத்த நிலையில் திடீரென மர்ம நபர்கள் தங்களது இடுப்பில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது யாசரின் தலைஉள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த முகமது யாசர் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் முகமது யாசர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனை தொடர்ந்து முகமது யாசரின் உறவினரிடம் விசாரணை நடத்தியபோது, பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் ஜானகிராமன் மகன் ராஜா மீது சந்தேகம் உள்ளதாக அவர் போலீசாரிடம் தெரிவித்த நிலையில், ராஜாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ராஜா, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரிடம் முகமது யாசரை முன்விரோதம் காரணமாக ஏதாவது செய்ய வேண்டுமென கேட்டுள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணராஜ், செங்கல்பட்டு மாவட்டம், வல்லத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் முகமது யாசரின் கை, கால்களை உடைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ், சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த ராம் என்பவருக்கு முகமது யாசரின் புகைப்படத்தை அனுப்பி வைத்து, இந்த வேலையை முடித்து விட்டால் அதற்குண்டான தொகையை பெற்று தருகிறேன் என விக்னேஷ், ராமிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து ராம், அதே பகுதியை சேர்ந்த 17 வயதான சிறார் ஒருவரை அழைத்துக்கொண்டு கடந்த மாதம் 28ம் தேதி முகமது யாசரின் வீட்டுக்கு சென்று தண்ணீர் வாங்கி குடிப்பது போன்று குடித்துவிட்டு அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
3 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், கிருஷ்ணராஜ், ராஜா ஆகியோர் கொலை முயற்சியில் ஈடுபட சொன்னதாக ஒப்புக்கொண்டதன் பேரில் ராஜா, கிருஷ்ணராஜ், ராம், விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.