வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கியதில் ரூ.5.25 கோடி வருவாய் அதிகாரிகள் தகவல் தீபாவளி பண்டிகையையொட்டி
வேலூர், அக்.31: தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கியதில் ரூ.5.25 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அந்த வகையில், வேலூர் போக்குவரத்து மண்டலத்தின் சார்பில் இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் லட்சக்கணக்கானோர் பயணம் செய்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.5.25 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது வேலூர் போக்குவரத்து மண்டலம். இந்த மண்டலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விஷேச நாட்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 17ம் தேதி ரூ.69.55 லட்சமும், 18ம் தேதி ரூ.90 லட்சமும், 19ம் தேதி ரூ.1.08 கோடியும், 20ம் தேதி ரூ.92 லட்சமும், 21ம் தேதி ரூ.92 லட்சமும், 21ம் தேதி ரூ.60.06 லட்சமும், 22ம் தேதி 1.05 கோடி என மொத்தம் ரூ.5 கோடியே 25 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.65-70 லட்சம் வருவாய் கிடைக்கும். சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் ரூ.1.10 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
  
  
  
   
