வேலூர், ஜூலை 31: காட்பாடி வழியாக வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 9 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். காட்பாடி ரயில்வே சந்திப்பு பிளாட்பாரம் 1ல் நேற்று காலை 9.40 மணிக்கு வந்து நின்ற பிலாஸ்பூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி ரயில்வே எஸ்ஐக்கள் பத்மராஜா, ஜெயக்குமார் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வண்டியின் பின்புறம் உள்ள பொதுஜன பெட்டியில் கழிவறை அருகில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டனர். சோதனையில் தலா 3 கிலோ கொண்ட கஞ்சா பண்டல்கள் பைகளில் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை நடத்தியதில் யாரும் அந்த பைகளை தாங்கள் கொண்டு வரவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து கஞ்சா பண்டல்களை கைப்பற்றிய ரயில்வே போலீசார் அவற்றை மேல் நடவடிக்கைக்காக வேலூர் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
+
Advertisement