தனியார் நிறுவன மேலாளர் மனைவியிடம் ரூ.20.91 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை காட்பாடியில் அதிக லாபம் ஆசைக்காட்டி
வேலூர், ஜூலை 31: காட்பாடியில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி தனியார் நிறுவன மேலாளரின் மனைவியிடம் ஆன்லைனில் ரூ.20.91 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் பழைய காட்பாடியை சேர்ந்தவர் தனியார் நிறுவன மேலாளரின் மனைவி. இவரது வாட்ஸ்அப்பிற்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அடிக்கடி வந்துள்ளது. அதை உண்மையென நம்பியவர், அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கில் சென்று வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்துள்ளார்.
தெடர்ந்து அந்த குரூப்பில் இருந்த உறுப்பினர்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பது தொடர்பான விளம்பர திட்டங்களை அதில் பதிவு செய்துள்ளனர். மேலும் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். பல்வேறு தவணைகளாக ரூ.20.91 லட்சம் முதலீடு செய்ததாக தெரிகிறது. ஆனால் கூறியபடி அதிக லாபம் கிடைக்கவில்லையாம். இதனால் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முயன்றுள்ளார். அப்போது கூடுதலாக முதலீடு செய்தால் மட்டுமே அந்த பணத்தை திரும்ப எடுக்க முடியும் என அந்த குரூப்பில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.