ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை ஊழியர் சஸ்பெண்ட் மாவட்ட வன அலுவலர் உத்தரவு வேலூரில் ஓய்வுபெற்ற வனபாதுகாவலர் மனைவியிடம்
வேலூர், அக்.30: வேலூரில் ஓய்வுபெற்ற வனபாதுகாவலர் மனைவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வனத்துறை இளநிலை உதவியாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவர் வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனப்பாதுகாவலராக பணியாற்றி கடந்த 2022ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு ரூ.2.18 லட்சம் அரியர்ஸ் மற்றும் சம்பள தொகை நிலுவையில் இருந்துள்ளது. இதற்கிடையில் ஜெயவேல் கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் அவரது மனைவி வசந்தி(55), தனது கணவருக்கு வர வேண்டிய நிலுவை தொகை குறித்து கேட்க வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தை அணுகி உள்ளார். அப்போது வனத்துறை அலுவலகத்தில் ‘இ’ பிரிவில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் ஏழுமலை, வசந்தியிடம் நிலுவை தொகை பெற ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 15ம் தேதி இளநிலை உதவியாளர் ஏழுமலையிடம், வசந்தி ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு வந்த விஜிலென்ஸ் போலீசார், இளநிலை உதவியாளர் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இளநிலை உதவியாளர் ஏழுமலையை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
