ஊசி போட்டு தொழிலாளியை கொன்ற ஜார்க்கண்ட் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வேலூருக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தபோது
வேலூர், ஜூலை 30: வேலூருக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தபோது, வந்து தொழிலாளியை ஊசி போட்டு கொலை செய்த ஜார்க்கண்ட் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிர்தம்பா(35). இவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த பாடோ ஓரன், நிக்கமல், அக்கீல்சர்மா, சுனில்குமார் ஆகிய 4 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களிடம் தலா ரூ.1.10 லட்சத்தை கடந்த 2007ம் ஆண்டு வாங்கிக்கொண்டு, வேலூருக்கு அழைத்து வந்தார். அப்போது, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே லாட்ஜில் தங்கி, மருத்துவப் பரிசோதனை செய்வதாக கூறி, 5 பேருக்கும் ஊசியை செலுத்தினார். அதில் தொழிலாளி பாடோ ஓரனுக்கு அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேர் நோய்வாய்ப்பட்டனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அமிர்தம்பாவை கைது செய்தனர். தொடர்ந்து 2015ல் ஜாமீனில் வெளியே சென்ற அமிர்தம்பா தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளியில் செல்லமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஜார்கண்ட் சென்று அமிர்தம்பாவை கடந்தாண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் கோர்ட் வளாகத்தில் உள்ள வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட அமிர்தம்பாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.