வேலூர், செப்.26: வேலூர் மாவட்ட வன எல்லைப்பகுதிகளை சேர்ந்தவர்கள் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க வரும் 10ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். வேலூர் தலைமை வனப்பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட எஸ்பி மற்றும் உதவி வனப்பாதுகாவலர் ஆகியோர் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை ஒப்படைக்கும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்ட வன எல்லைக்கு உட்பட்ட அணைக்கட்டு தாலுகா அல்லேரிமலை கிராமங்கள், ஜார்தான்கொல்லை, பஞ்சமலை கிராமங்கள், வரதலம்பட்டு, கீழ்கொத்தூர், பீஞ்சமந்தை, தொங்குமலை, குடியாத்தம் தாலுகா மோர்தானா, சைனகுண்டா, தனகொண்டபல்லி, சேம்பள்ளி, வெள்ளேரி, பேரணாம்பட்டு தாலுகா அரவட்லா, பாஸ்மார்பெண்டா, மசிகம், சாரங்கல் ஆகிய பகுதிகளை வன உயிரின வேட்டையில்லாத பகுதிகளாக மாற்றும் நோக்கில், நாட்டுத்துப்பாக்கிகளை தாமாக ஒப்படைப்பது குறித்து, அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில், வனங்கள் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்கவும், உரிமம் இல்லாத மற்றும் நாட்டு துப்பாக்கிகளை தாமாக முன்வந்து போலீஸ், வருவாய்த்துறை மற்றும் கிராம முக்கிய நபர்களிடம் செப்டம்பர் 10ம்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த அவகாசம் அக்டோபர் 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். மேலும் விழிப்புணர்வு மூலம் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் இதுவரை 10 நாட்டு துப்பாக்கிகளை தானாக முன்வந்து வனத்துறை மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement