Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 ஆறுகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் கொட்டும் நீர் வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில்

ஒடுகத்தூர், அக்.24: ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில் 3 ஆறுகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் கொஞ்சும் மலை கிராமங்களில் ஒன்று ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள பீஞ்சமந்தை மலை கிராமம். இந்த மலை கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட கானாறுகள், 30க்கும் மேற்பட்ட ஓடைகள் பாய்ந்தோடுகிறது. இங்கு பெரியபணப்பாறை பகுதியில் உருவாகும் சிற்றாறு தேந்தூர், தொங்குமலை, சின்ன எட்டிப்பட்டு வழியாகவும், கட்டிப்பட்டு பகுதியில் உருவாகும் மற்றொரு சிற்றாறு, குப்சூர், பீஞ்சமந்தை வழியாக செல்கிறது. அதேபோல், நம்மியம்பட்டு அருகே உருவாகும் ஆறு கோரத்தூர், சாட்டாத்தூர், பெரிய எட்டிப்பட்டு வழியாக செல்கிறது. இவ்வாறு 3 ஆறுகள் சின்ன எட்டிப்பட்டு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஒன்றாக கலந்து நீர்வீழ்ச்சியாக மாறி ரம்மியமாக காட்சி தருகிறது.

அதுமட்டுமின்றி, மலை கிராமங்களில் இது போன்று ஏராளமான வனப்பகுதிகளில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளது. தற்போது, பெய்த கனமழையால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றியுள்ள மலை கிராம மக்கள் ஆர்வத்துடன் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இருந்தாலும், சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் தண்ணீர் கொட்டும் உயரமான பாறைகள் மீது‌ நின்று செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கின்றனர். இதனால், வனத்துறையினரும் சற்று இதன் மீது தனி கவனம் செலுத்தி ஆபத்தான முறையில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.