நவராத்திரியையொட்டி காளி கோயில் திறப்பு அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கே.வி.குப்பம் அருகே இருதரப்பு மோதலால் மூடப்பட்டது
கே.வி.குப்பம், செப்.24: கே.வி.குப்பம் அருகே இருதரப்பு மோதலால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட கோயில், வழக்கம்போல் நவராத்திரி விழாவையொட்டி நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு பகுதியில் சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. அப்போது இருதரப்பு மோதல் காரணமாக கோயிலை அறநிலையத்துறையினர் பூட்டி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால் கோயில் பூட்டப்பட்டது. ஆனால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆண்டிற்கு ஒருமுறை நவராத்திரி விழாவின்போது மட்டும் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் நவராத்திரியையொட்டி தாசில்தார் பலராமன் தலைமையில் வருவாய் துறையினர், அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் நேற்று கோயில் திறக்கப்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கோயிலை திறக்கவிடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து நவராத்திரி முடியும் வரை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.