வேலூர், செப்.24: திருப்பதியில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கலால் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சை சோதனை செய்தனர். அதில், சந்தேகம் அளிக்கும் வகையில் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்து. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த தென்னவன்(27), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரபத்ரா(31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 பேரும் நாமக்கலில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு கஞ்சா வாங்கி தருமாறும், அதை கூடுதல் விலைக்கு விற்றால் லாபம் கிடைக்கும் எனவும் ராஜேந்திரபத்ராவிடம், தென்னவன் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் ஒடிசாவுக்கு சென்று ஒரு கிலோ 10 ஆயிரத்திற்கு, 5 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு நாமக்கல் சென்றது தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.