காட்பாடி வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் ேபாக்குவரத்தில் மாற்றம் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் திருச்சி, மதுரை கோட்டங்களில் பராமரிப்புப்பணி
வேலூர், செப்.23: திருச்சி மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களில் தண்டவாள பராமரிப்புப்பணிகள் காரணமாக திருவண்ணாமலை, காட்பாடி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் போக்குவரத்து மற்றும் கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும் வண்டி எண் 07229 சிறப்பு ரயில் வரும் 26ம் தேதி மட்டும், மதுரை சந்திப்பு, கொடைக்கானல் ரோடு மற்றும் திண்டுக்கல் சந்திப்புகளை தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்புகள் வழியாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, சித்தூர், பாகாலா, திருப்பதி, ரேணிகுண்டா, கூடூரு, நெல்லூர், ஓங்கோல் வழியாக ஐதராபாத் டெக்கான் ரயில் நிலையத்தை அடைகிறது. இப்பாதையில் அன்றைய தினம் கூடுதலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல், காலை 9.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா வழியாக மறுநாள் மதியம் 12.40 மணிக்கு கச்சேகுடா சென்றடையும் வண்டி எண் 16354 நாகர்கோவில்-கச்சேகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 27ம் தேதி மட்டும் திருச்சிராப்பள்ளி சந்திப்பை தவிர்த்து, திண்டுக்கல், கரூர் வழியாக திருப்பிவிடப்படுகிறது. இதே ரயில் மறுமார்க்கத்தில் வண்டி எண் 16353 ஆக, வரும் 28ம் தேதி கச்சேகுடாவில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பை தவிர்த்து கரூர், திண்டுக்கல் வழியாக நாகர்கோவிலுக்கு மறுநாள் இரவு 8.30 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுபோல் தெற்கு ரயில்வே மேலும் பல ரயில்களின் அட்டவணையை மாற்றி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.