லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 4 பேர் கைது சேலம், மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து
குடியாத்தம், செப்.23: குடியாத்தம் அருகே மேற்கு வங்கத்தில் இருந்து லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் சேலம், மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெருமாள்பல்லி சோதனை சாவடியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பரதராமி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு தோல்களை ஏற்றி சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 36 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா வரிமரிச்சான் கிராமத்தை சேர்ந்த முத்துக்காளை(30), திருச்செந்தூரான்(47) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பட்டி தாலுகா கல்லேரிபட்டி அடுத்த கல்யாணகிரி கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி பாஸ்கர்(33), கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ்(33), வேல்பாண்டியன்(33), மதுரை மாவட்டத்தை சேர்ந்த அஜிமீர் காஜா மைதீன் (31) ஆகிய 4 பேரை பரதராமி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.