அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவு
வேலூர், செப்.22: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் போதுமான எண்ணிக்கையில் ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் சிறப்பு மற்றும் உயர் சிறப்பு வசதிகளுடன் 64,792 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் தினமும் சராசரியாக புறநோயாளிகள் பிரிவில் 1.15 லட்சம் பேரும், உள்நோயாளிகள் பிரிவில் 39 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகளின் நலன் கருதி பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில், ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்குமாறு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம், அனைத்து மருத்துவக்கல்லூரி டீன்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் ஸ்டான்ட் வசதியுடன் ஆக்சிஜன் சிலிண்டர், போதுமான எண்ணிக்கையில் ஸ்ட்ரெச்சர்கள், தள்ளுவண்டிகள், சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத்திட்டம், சிஎஸ்ஆர் நிதி அல்லது கிடைக்கக்கூடிய வேறு நிதியை பயன்படுத்தி, மருத்துவமனைக்கு தேவையான சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களை அந்தந்த மருத்துவமனை நிர்வாகங்கள் வாங்கலாம்.
மாற்றுத்திறனாளி நோயாளிகளின் வசதிக்காக, லிப்ட் அருகில் சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் வைக்க வேண்டும். மருத்துவமனையின் அனைத்து வார்டுகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளில், சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் நிறுத்தி வைக்க இடங்களை உருவாக்க வேண்டும். நோயாளி மற்றும் உதவியாளர்கள் வசதி இல்லாமல் பாதிக்கப்படக்கூடாது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவரது உதவியாளர்கள் எளிதில் அணுகும் வகையில், சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.