வேலூர், ஆக.22: வேலூரில் குட்கா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 43 கிலோவை பறிமுதல் செய்தனர். வேலூர் வடக்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக வடக்கு போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சேண்பாக்கம், ஆர்.என்.பாளையம், கொணவட்டம் பகுதிகளில் திடீர் சோதனையிட்டனர்.
அப்போது சேண்பாக்கம் பகுதியில் ஐயப்பன்(38), ஜெயலட்சுமி(59), ஆர்.என்.பாளையத்தில் ரஹீம்(40) ஆகிய 3 பேரும், வீடுகளில் குட்கா பதுக்கி விற்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நந்தினி, அன்சார், கணேஷ், முபாரக் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.