Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1,223 டன் உரங்கள் ரயில் மூலம் காட்பாடிக்கு வந்தது லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர், திருவண்ணாமலை உட்பட 7 மாவட்டங்களுக்கு

வேலூர், ஆக.22: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 7 மாவட்டங்களுக்கு யூரியா, காம்பளக்ஸ் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 1,223 டன் உரங்கள் காட்பாடிக்கு ரயிலில் நேற்று வந்தது. இவை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக உரம், பூச்சி மருந்துகள், அடி உரம், தெளிப்பு மருந்துகள் போன்றவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சென்னை, தூத்துக்குடி நகரங்களில் இருந்து யூரியா, டிஏபி உரங்கள் சரக்கு ரயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த உரங்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கூட்டுறவு உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரிலிருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,223 டன் உரங்கள் நேற்று காலை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர், திருவண்ணாமலை உட்பட 7 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், செங்கல்பட்டிற்கு 13 டன், காஞ்சிபுரத்திற்கு 51 டன், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 135 டன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 41 டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 415 டன், வேலூர் மாவட்டத்திற்கு 75 டன், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 25 டன் என மொத்தம் 755 யூரியா பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், செங்கல்பட்டிற்கு 12 டன், காஞ்சிபுரத்திற்கு 51 டன், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 110 டன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 34 டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 179 டன், வேலூர் மாவட்டத்திற்கு 70 டன், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 12 டன் என மொத்தம் காம்பளக்ஸ் 468 டன் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.