வேலூர், நவ.19: நிதி முறைகேடு புகார் எதிரொலியால், பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவர் செக் பவரை ரத்து செய்து, துணை தலைவர், செயலாளருக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று அதிரடி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சி ஒன்றியம் பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவராக புஷ்பராஜ் என்பவர் உள்ளார். இந்த ஊராட்சியில் பெருமளவு நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் மீதான ஆரம்பக்கட்ட விசாரணையில் நிதி முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊராட்சி மன்றத்தலைவர் புஷ்பராஜூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பராஜின் செக் பவரை ரத்து செய்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று உத்தரவிட்டார்.
அதேபோல் நிதி முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபு, ஊராட்சி செயலாளர் அருள் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செக் பவர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘நிதி முறைகேடு தொடர்பான புகார்களின் மீது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடந்து வரும் நிலையில் ஊராட்சி மன்றத் தலைவரின் செக் பவர் கலெக்டரால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நிதிமுறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’ என்றனர்.


