வேலூர், செப்.19: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தமிழக பகுதிகளின் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக நாளைக்குள் தமிழகத்தில் அநேக இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மிதமான மழையும், இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில், கடந்த 15ம்தேதி முதல் பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்கிறது.
அதன்படி நேற்று முன்தினம் 11 மணியளவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில் அதிகளவாக 50.20 மி.மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): ஒடுகத்தூர் 5, மேலாலத்தூர் 30.80, மோர்தானா அணை 33, ராஜாதோப்பு அணை 7, வடவிரிஞ்சிபுரம் 9, காட்பாடி 10, பொன்னை 24.20, வேலூர் சர்க்கரை ஆலை (அம்மூர்) 7.20, பேரணாம்பட்டு 9.40, வேலூர் கலெக்டர் அலுவலகம் 1. வேலூர் தாலுகா 5.40. மாவட்டத்தில் பதிவான மொத்த மழையளவு 192.20 மி.மீட்டர். மாவட்டத்தின் சராசரி 16.02 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.