தடுப்பணை நீரில் மூழ்கி லேப் டெக்னீசியன் பலி பள்ளிகொண்டா அருகே சோகம் பாலாற்றில் குடும்பத்துடன் குளிக்க சென்றபோது
பள்ளிகொண்டா, நவ.18: வேலூர், சின்ன அல்லாபுரம் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அகமது(40). கஸ்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ரியாஸ் அகமது, தனது மனைவி பாத்திமா தபசும், மகன் பாரிஸ் அகமது, மகள் ஹனியா பாத்திமா ஆகியோருடன் இறைவன்காடு- கவசம்பட்டு பாலாறு இடையே உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, ரியாஸ் அகமது கால் இடறி நீரின் ஆழமான பகுதியில் மூழ்கியுள்ளார். இதனையறிந்து அவரது மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரியாஸ் அகமது மீட்டபோது அவர் நீரிலேயே மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தகவலறிந்து சென்ற பள்ளிகொண்டா போலீசார் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ரியாஸ் அகமது மனைவி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


