தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.28 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் முதலீடு மெசேஜ் அனுப்பி
வேலூர், அக்.18: வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஆசை காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.82 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி குமரன் நகரை சேர்ந்த 27 வயது இளைஞர். இவர் தனியார் நிறுவனத்தில் சீனியர் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஓட்டல், ரெஸ்டாரண்டுகளுக்கு மதிப்பீடு செய்வது குறித்தும், இலக்கு குறித்தும் குறுந்தகவல் வந்துள்ளது. இதை நம்பி அவர்கள் கொடுத்த டாஸ்க்கை முடித்து மதிப்பீடுகளை அனுப்பி சிறிய அளவில் கமிஷன் பெற்றார்.
தொடர்ந்து அவருக்கு ‘கூகுள் ரிவ்யூ டாஸ்க் ரிலீஸ் குரூப் டி7’ என்ற லிங்க்கை கிளிக் செய்யுமாறும், அதன் மூலம் முதலீடு செய்தால் தொடர்ந்து லாபம் கிடைக்கும் என்றும் தகவல் வந்துள்ளது. அதை நம்பி வாட்ஸ்ஆப் குரூப்பில் மேற்கண்ட தனியார் நிறுவன அதிகாரி இணைந்துள்ளார். அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் பிசினஸ் தகவல் பரிமாற்றங்களை கண்டு தானும் முதலீடு செய்யலாம் என்ற எண்ணத்தில் கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை பலவகையான பணபரிமாற்றங்களாக ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 168ஐ செய்துள்ளார். ஆனால் அவர் முதலீடு செய்த பணபரிமாற்றங்களுக்கான லாபம் வரவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்பத்தருமாறு கேட்டபோது, மேலும் பணபரிமாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற பதில் கிடைத்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனியார் நிறுவன அதிகாரி இதுதொடர்பாக கடந்த 14ம் தேதி வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரஜனிகாந்த், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
