20 தற்காலிக கண்காணிப்பாளர் பணியிடம் ஓராண்டு நீட்டிப்பு சுகாதாரத்துறை உத்தரவு வேலூர் உட்பட 12 அரசு மருத்துவமனைகளில்
வேலூர், செப்.18: வேலூர் உட்பட 12 அரசு மருத்துவமனைகளில் 20 தற்காலிக கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஓராண்டு நீட்டத்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இதில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனை, சென்னை கே.கே.நகர் மறுவாழ்வு சிகிச்சை மையம், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், தற்காலிக அடிப்படையில் 27 அலுவலக கண்காணிப்பாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணிபுரியும் அலுவலக கண்காணிப்பாளர் பணியிடங்களை நீட்டிக்க, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக கண்காணிப்பாளர்களை நீட்டிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 12 அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த, 20 தற்காலிக கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஓராண்டு நீட்டிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 கண்காணிப்பாளர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 கண்காணிப்பாளர் பணியிடங்கள், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 2, சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் 2, சென்னை கே.கே.நகர் மறுவாழ்வு மையத்தில் 1 கண்காணிப்பாளர் பணியிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 கண்காணிப்பாளர் பணியிடம், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 1, சென்னை ஓமந்தூரார் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 2, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 4, சென்னை ராயப்பேட்டை தொற்றாநோய் சிகிச்சை மருத்துவமனையில் 1, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் 1, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 பணியிடம் என மொத்தம் 20 தற்காலிக கண்காணிப்பாளர் பணியிடங்களை ஓராண்டு நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.