டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30 சதவீதம் மதுபான வகைகள் இருப்பு வைக்க நடவடிக்கை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
வேலூர், அக்.17: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30 சதவீதம் மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி ₹100 முதல் ₹150 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகிறது. தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் வழக்கத்தை விட 50 சதவீதம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை நடக்கும். இந்நிலையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபானங்கள் இருப்பு அதிகமாக வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபானங்கள் குவிப்பது வழக்கம். டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக 7 நாட்கள் சரக்குகள் இருப்பில் இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபானங்கள் இருப்பு அதிகமாக வைக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை என்பதால் கூடுதலாக 30 சதவீதம் மதுபானங்கள் விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடையிலும் 2 நாட்களுக்குண்டான சரக்குகள் இருப்பில் இருக்கிறது. விலை குறைந்த பிராந்தி, விஸ்கி வகைகள் தான் விற்பனை 80 சதவீதம் இருக்கும். மற்றபடி பிரீமியம் எனப்படும் விலை உயர்ந்த மதுபான வகைகள் 20 சதவீதம் விற்பனை இருக்கும். அதனால் ஒவ்வொரு கடையிலும் விலை குறைந்த மதுபானங்களை அதிகளவில் வைக்க டாஸ்மாக் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம். தீபாவளிக்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தீபாவளியன்று கூடுதலாக சரக்குகள் விற்பனையாக வாய்ப்புள்ளது. அதனால் அதற்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.