Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொம்புடன் சுவரில் மாட்டியிருந்த 2 மான் தலைகள் பறிமுதல் தொழிலாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் ஒடுகத்தூர் அருகே சோதனையின்போது

ஒடுகத்தூர், செப்.17: ஒடுகத்தூர் அருகே கொம்புடன் சுவற்றில் மாட்டியிருந்த 2 மானின் தலைகளை வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும் தொழிலாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்‌. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் இறந்த மானின் தலைகளை வைத்திருப்பதாக நேற்று மாவட்ட வன அலுவலர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர் நேற்று வரதலம்பட்டு கிராமத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பூபதி(50) என்பவரது வீட்டில் சோதனை நடத்திய போது வீட்டு சுவரில் இறந்த மானின் கொம்புடன் 2 தலைகள் அங்கு மாட்டியிருந்தது. இதனைப்பார்த்த வனத்துறையினர் உடனே கொம்புடன் மானின் தலைகளை கைப்பற்றினர். பின்னர், பூபதியிடம் நடத்திய விசாரணையில் ‘பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டு பகுதிக்கு சென்ற போது அங்கு கொம்புடன் இறந்த நிலையில் மான்கள் இருந்துள்ளது. அதனை எடுத்து வந்து வீட்டு சுவரில் மாட்டி வைத்ததாக பூபதி கூறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து, வனத்துறையினர் வழக்குப்பதிந்து பூபதியை கைது செய்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக கொம்புடன் இறந்த மானின் தலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். மேலும், இனி இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து அவரை அனுப்பி வைத்தனர். ஒடுகத்தூர் அருகே கொம்புடன் இறந்த மானின் தலைகளை வைத்திருந்த நபரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.