அரசு வங்கி மேலாளரிடம் ரூ.92.30 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் ஆசைக்காட்டி
வேலூர் செப்.17: பங்கு சந்தையில் முதலீடு எனக்கூறி அதிக லாபம் ஆசைகாட்டி அரசு வங்கி மேலாளரிடம் ரூ.92.30 லட்சம் மோசடி தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்றைய டிஜிட்டல் காலத்தில் அனைத்தும் கணினி மயமாகி விட்டது. இதனால் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் வரும் தகவல்களை நம்பி பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். சைபர் குற்றங்கள் தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சைபர் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
மதுரை மாவட்டம் அணையூர் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் வேலூரில் உள்ள அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக மெசேஜ் வந்துள்ளது. பின்னர், அந்த லிங்கில் சென்றவுடன் எஸ்எம்சி எலைட் இன்வெஸ்டர்ஸ் கிளப் என்ற குழுவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் அந்த குழுவில் பார்த்தபோது, ஏராளமானோர் பல மடங்கு பணம் சம்பாதித்துள்ளதாக கமென்ட் பதிவு செய்திருந்தனர். மேலும் வங்கி எண்ணும் இணைக்கப்பட்டிருந்தது.
அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, வங்கி மேலாளரும் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் கடந்த 11ம் தேதி வரை பங்கு சந்தையில் முதலீடு என பல்வேறு தவணையில் 22 நாட்களில் ரூ.92 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர், வங்கி மேலாளர், தான் செலுத்திய ரூ.92 லட்சத்தை திரும்ப எடுக்க முயன்றார். அப்போது, கூடுதலாக பணத்தை செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் விசாரித்தபோது, பங்கு சந்தை முதலீடு என்ற பெயரில் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சைபர் கிரைம் இணையதளத்தில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் வரும் பங்குச்சந்தை முதலீடு, பகுதி நேர வேலை போன்ற மோசடி விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலர் இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதில் படித்தவர்களே அதிகம் ஏமாறுகின்றனர் என்பது தான் வேதனை. எனவே மோசடி விளம்பரங்களை நம்பாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றனர்.