அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை காட்பாடியில் உள்ள
வேலூர், அக்.16: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் காரணமாக மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக இமெயில் முகவரிக்கு மிரட்டல் சென்றுள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் உடனடியாக வேலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று மாலை வேலூர் மாவட்ட காவல்துறை வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மற்றும் மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு வந்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர் குழுவினர் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.