பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டி தீ குளிக்க முயற்சி வேலூர் கலெக்டர் காலில் விழுந்து கதறல் வீட்டை அபகரித்து அடியாட்களுடன் மிரட்டும் ரவுடி
வேலூர், செப்.16: வேலூரில் வீட்டை அபகரிதது 20 அடியாட்களுடன் ரவுடி மிரட்டுவதாகவும், நடவடிக்கை கோரி மூதாட்டி பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டி தீ குளிக்க முயற்சி செய்து, கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுதார். இதனால் கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது மூதாட்டி ஒருவர், பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக்கொள்ள முயன்றார். இதனை கண்ட போலீசார், தடுத்த நிறுத்தி கேன் மூடி திறப்பதற்குள் பறித்தனர். அப்போது அங்கு வந்த கலெக்டர் சுப்புலட்சுமி காலில் மூதாட்டி விழுந்து நடவடிக்கை கோரி கதறினார்.
இதையடுத்து கலெக்டர் மூதாட்டியிடம் இருந்த மனுவை பெற்று விசாரணை நடத்தினார். அதில் வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி குணசுந்தரி(70) என தெரியவந்தது. உடனே வேலூர் ஏஎஸ்பிக்கு போன் செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு 5 மகள்கள் உள்ளனர். சலவன்பேட்டையில் எனது மாமனார் கண்ணன் பெயரில் வீடு உள்ளது. அந்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த சிலர், அசல் பத்திரம், 5 சவரன் நகையை எடுத்துக்கொண்டு, வீட்டின் பாதியை அபகரித்து வசித்து வருகின்றனர்.
தினமும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்கின்றனர். எங்கு புகார் கூறினாலும் ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறுகின்றனர். பீரோ, மின்விசிறி ஆகியவற்றை உடைத்துவிட்டனர். எங்களை வீட்டுக்குள்ளே வைத்து கதவை வெளிபக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டனர். கரன்ட் வைத்துவிடுவேன் என்று மிரட்டுகின்றனர். ரவுடியின் தம்பி ஒருவன் எனது பேத்திகளிடம் தகராறு செய்கின்றனர். நள்ளிரவில் நிர்வாணமாக வந்து கலாட்டா செய்கின்றனர். போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது வீட்டை திரும்ப பெற்று தரவேண்டும். எனது மகள்கள் வசிக்க வழிவகை செய்யவேண்டும்’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.