குழந்தையின் வெள்ளிக்கொலுசு செல்போன்கள் திருடியவர் கைது சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார் வேலூரில் இரவு வீடு புகுந்து
வேலூர், செப்.16: வேலூரில் இரவு வீடு புகுந்து குழந்தையின் வெள்ளிக்கொலுசு மற்றும் 3 செல்போன்களை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கலாஸ்பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(51), ஜவுளிக்கடை ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 13ம் தேதி இரவு, வீட்டில் 3வது மாடியில் தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 3 செல்போன்கள் மற்றும் குழந்தை அணிந்திருந்த வெள்ளி கொலுசு காணாமல் போனதை அறிந்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் வேலுார் தெற்கு இன்ஸ்பெக்டர் காண்டீபன் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், சீனிவாசன் வீட்டில் புகுந்து திருடியது சலவன்பேட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராகுல் ராப்ர்ட்(23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தெற்கு சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையில், போலீசார் ராஜ்குமார், சீமோன் மற்றும் அல்தாப்பாஷா ஆகியோர், கோட்டை சுற்றுச்சாலை மின்வாரிய அலுவலக சந்திப்பு பகுதயில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ராகுல் ராபர்ட்டை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து வெள்ளி கொலுசு மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கனவே 12 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.