திருத்தணிக்கு இன்று முதல் 155 சிறப்பு பஸ்கள் இயக்கம் பொதுமேலாளர் தகவல் வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து
வேலூர், ஆக.14: ஆடி கிருத்திகையையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து திருத்தணிக்கு 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக பொதுமேலாளர் தெரிவித்தார். ஆடி கிருத்திகை விழாவின்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், முருகனின் அறுபடை வீடு உள்பட பல்வேறு முருகன் கோயில்களுக்கு காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு நாளை பரணி காவடியும், நாளை மறு தினம் 16ம் தேதி ஆடி கிருத்திகையும் நடக்கிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு செல்கின்றனர். இதையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று முதல் 17ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதில் வேலூரில் இருந்து திருத்தணிக்கு 60 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்களும், சோளிங்கரில் இருந்து 5பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 15 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 25 பஸ்களும், ஆம்பூரில் இருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டில் இருந்து 10 பஸ்களும் என மொத்தம் 155 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் ஆடிக்கிருத்திகையையொட்டி வேலூர் மண்டலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரிக்கு 10 பஸ்கள், வேலூர் மாவட்டம் வள்ளிமலைக்கு 8 பஸ்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறைக்கு 5 பஸ்கள், கைலாசகிரிக்கு 10 பஸ்கள் 16ம் தேதி வரை இயக்கப்படும். மேலும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் தெரிவித்தார்.