பசுமாட்டை மீட்க முயன்ற மூதாட்டி பாலாற்றில் மூழ்கி பலி மருமகள் உயிருடன் மீட்பு கே.வி.குப்பம் அருகே வெள்ளத்தில் அடித்துச்சென்ற
கே.வி.குப்பம், நவ.13: கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்சென்ற அடித்துச்சென்ற பசுமாட்டை மீட்க முயன்ற மூதாட்டி, நீரில் மூழ்கி பலியானார். அவரது மருமகள் உயிருடன் மீட்கப்பட்டார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ஊராட்சி கருத்தம்பட் பகுதியை சேர்ந்தவர் வஜ்ஜிரம்(70). இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்த பசுமாடுகளை வஜ்ஜிரம் மனைவி கீதா(60), மகன் அசோக்குமார்(35), மருமகள் பூர்ணிமா(30) ஆகியோர் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கீதா, மருமகள் பூர்ணிமா ஆகிய இருவரும் பசுமாடுகளை கருத்தம்பட் எல்லைப்பகுதியில் உள்ள பாலாற்றங்கரையில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றனர். அதில் ஒரு பசுமாடு காணாமல் போன நிலையில், எங்கு தேடியும் கிடைக்காததால் சோகத்துடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில், காணாமல் போன பசுமாடு பாலாற்று கரையின் மறுபக்கம் நீரில் அடித்து சென்று, தத்தளித்து கொண்டிருப்பதாக, நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். உடனடியாக கீதாவும், அவரது மருமகள் பூர்ணிமாவும் அங்கு சென்று பசுமாட்டை மீட்க முயன்றுள்ளனர். இதற்காக ஆற்றில் இறங்கியபோது, மாமியாரும் மருமகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இருவரும் ‘காப்பாத்துங்க, காப்பாத்துங்க’ என அலறி கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தகவல் அறிந்து கிராம மக்களும் வந்து சுமார் 1 மணி நேரம் போராடி இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் பசுமாட்டை தேடியபோது கிடைக்கவில்லை. இதற்கிடையில் தகவலறிந்த கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பூர்ணிமாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
