40 பேர் ஆர்டிஓவிடம் பிணைய பத்திரம் வழங்க நடவடிக்கை வேலூர் மாவட்ட காவல்துறை தகவல் சூதாட்ட விவகாரத்தில்
வேலூர், அக்.13: சூதாட்ட விவகாரத்தில் 40 பேர் ஆர்டிஓவிடம் பிணைய பத்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோரின் தலைமையில் காட்டன் சூதாட்டம் நடத்துபவர்கள், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் என்று கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், 50க்கும் மேற்பட்ட நபர்களை சந்தேகத்தின்பேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அதில், 14 பேர் சூதாட்டம் நடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 15 செல்போன்கள், ரூ.48ஆயிரம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சூதாட்ட விவகாரத்தில் 40 பேர் ஆர்டிஓவிடம் பிணைய பத்திரம் பெற்று, அவர்கள் இனி வரும் காலங்களில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று பிணைய பத்திரத்தில் எழுதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து சூதாட்டம் நடத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.