ஒடுகத்தூர், செப்.13: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் நேற்று ஆடுகளின் வரத்து அதிகரித்து ரூ.28 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடந்தது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்கள், வேலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் வாரந்தோறும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதன்படி, வெள்ளிக்கிழமையான நேற்று ஒடுகத்தூரில் ஆட்டுச்சந்தை கூடியது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆடுகளின் வரத்து அதிகரித்து விற்பனை படுஜோராக இருந்தது. ஆனால், கடந்த வாரம் ஆடுகளின் வரத்து குறைந்ததால் விற்பனையும் சற்று மந்தமாக காணப்பட்டது. தொடர்ந்து, நேற்று நடந்த சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
புரட்டாசி மாதம் நெருங்குவதால் அதற்கு முன்பு ஆடுகளை விற்று விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்கவும், வாங்கவும் சந்தையில் கூடினர். இதனால் விற்பனை களைகட்டியது. வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை விற்பதில் மும்முரம் காட்டினர். ஒரு ஜோடி ஆடுகள் விலை ரூ.50 ஆயிரம் வரை விலை போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `வழக்கமாக ஆடி, ஆவணி மாதங்களில் ஆடுகளின் வரத்து அதிகரித்து வியாபாரமும் நன்றாக இருக்கும். ஆனால், கடந்த வாரம் ஆடுகள் வரத்து இல்லை. தற்போது புரட்டாசி மாதம் நெருங்குவதால் இன்று (நேற்று) நடந்த சந்தைக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒட்டு மொத்தமாக ரூ.28 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடந்தது' என்றனர்.
