பாலாற்றை மாசுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி
வேலூர், ஆக.13: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பாலாற்றை மாசுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவினர் ஊருக்கு ஒரு ஏரியையாவது தூர் வாரியிருக்காங்களா? பணத்தை ஒதுக்கினார்களே தவிர, ஒன்றை கூட தூர்வாரவில்லை. இந்த ஆண்டு நாங்கள் தூர்வாரிய ஏரிகளின் லிஸ்ட் எங்களிடம் உள்ளது, வாங்க காட்டுகிறோம். கடந்த ஆட்சியில் ஆற்காட்டில் இருந்து செங்கல்பட்டு வரை 25 ஏரிகளை தூர் வாருவதாக கூறினார்கள். அதில் ஒன்றைக்கூட தூர்வாரவில்லை. இதுகுறித்து அப்போதே நான் சட்டசபையில் கேள்வி எழுப்பினேன்.
வந்து ஏரியை காட்டுங்கள் என எதற்கும் பதில் இல்லை. பாலாற்றை மாசுபடுத்தும் வகையில் கழிவுநீரை விடுபவர் மீது கடுமையான நடவடிக்கையில் மாற்றுக்கருத்து இல்லை. கண்டிப்பாக மாசுப்படுத்துபவர்களின் மீது நடவடிக்கை எடுப்போம். கலைஞர் முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை இதுவரை எத்தனை அணைகளை கட்டி உள்ளோம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளேன். சும்மா வீம்புக்கு எடப்பாடி பேசுகிறார். பத்திரிகையாளர்கள் உங்களுக்கு தெரியும் எங்கு அணைக்கட்டுகிறேன் என்று. வாக்காளர் பட்டியலில் எல்லா ஊரிலும் பிரச்னை உள்ளது. காட்பாடி பகுதி மகிமண்டலத்தில் சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.